NEET தேர்வை எதிர்கொள்வது எப்படி?

போட்டித் தேர்வு டிப்ஸ் சில ஆலோசனைகள்!

மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’பொது நுழைவுத்தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வானது தமிழக கிராமப்புற மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்தச் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரும் கோப்புகளைக் குடியரசுத் தலைவருக்குத் தமிழக அரசு அனுப்பிவைத்துள்ளது.

இதனிடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2017-2018-ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. (Central Board of Secondary Education) அறிவிப்பு வெளியிட்டது.

நீட் தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால், பிராந்திய மொழிகளில் படித்த மாணவர்களுக்கு இத்தேர்வினை எழுதுவதில் சிரமம் ஏற்படும் என்று கூறி பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஹிந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 2016ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றதுபோல இப்போதும் அதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தேர்வுத் தேதியே குறிப்பிட்ட பிறகும், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்த நிலையிலும் தமிழக அரசு தரப்பில் முயற்சிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் மறுபுறம் தேர்வு ஆணையமும், மாணவர்களும் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குக் கல்வியாளர் ஆர்.ராஜராஜன் வழங்கும் ஆலோசனைகளை இப்போது பார்ப்போம்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படித்து சிறந்த மருத்துவர்களாக விழையும் மாணவர்கள், எதிர்வரும் நீட் தேர்வை எழுத, முனைப்புடன் உழைத்து படித்து தேர்வையும் எழுதப் போகிறார்கள்.நாடு முழுவதும் உள்ள மாநில மருத்துவப் பல்கலைக்கழங்களின் கீழே உள்ள மருத்துவக் கல்லூரிகள், இவற்றின் அனுமதியுடன் நடத்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இவற்றில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்களைச் சேர்க்க சி.பி.எஸ்.இ. நடத்தும் பொது நுழைவுத்தேர்வுதான், NEET (National Eligibility cum Entrance Test) ஆகும். இன்றளவில் NEET அல்லாமல் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் All India Institute of Medical Sciences -AIIMS மற்றும் Jawaharlal Institute of Post Graduate Medical Education & Research-JIPMER ஆகும். இவை அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நடத்தப்படுகிறது.

நீட் தேர்வில் தரவரிசையில் இடம் பிடிக்கும் மாணவர்கள் நீட் வழியாக உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய இடங்களான 15 விழுக்காடு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் மாநில அரசுகளின் 85 விழுக்காடு இடங்களைக் கேட்டுப் பெறலாம். பொதுவாக ஒரு மாநிலத்தின் மருத்துவ இடங்கள் 15 விழுக்காடு அகில இந்திய இடங்களாகும். எஞ்சிய 85 விழுக்காடு இடங்கள் மாநில இடங்களாகும். இன்றளவில், நடுவண் அரசின் மருத்துவக் குழுமம் (Medical Council of India) தமிழ்நாட்டைப் பொறுத்து, மாநில இடஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறை விதிகளின்படி NEET தேர்வு முடிவுகள் அடிப்படையில் மாணவர்களை அனுமதித்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் NEET தேர்வு இந்த ஆண்டு மே-7 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது. மல்டிப்பில் சாய்ஸ் முறையிலான இத்தேர்வு ஆஃப்-லைன் எழுத்துத் தேர்வாகும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, அஸ்ஸமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

180 வினாக்கள் உள்ள இந்த 3 மணி நேரத் தேர்வில் இயற்பியலில் 45 வினாக்களும் (180 மதிப்பெண்கள்), வேதியியலில் 45 வினாக்களும் (180 மதிப்பெண்கள்), உயிரியலில் 90 வினாக்களும் (360 மதிப்பெண்கள்) என மொத்தம் 180 வினாக்கள் 720 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.

சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்வில் குறைந்தபட்ச தகுதி பெற பொதுப் பிரிவினர் 50%, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் 40%, மாற்றுத்திறனாளிகள் 45% பெற வேண்டும்.நீட் 2016 ஒரு கண்ணோட்டம்: இயற்பியலில், மெக்கானிக்ஸில் (எந்திரவியல்) 12 வினாக்களும், ஃபுளுயிட்ஸில் (திரவவியல்) 1 வினாவும், தெர்மல் பிசிக்ஸில் (வெப்ப இயற்பியல்) 6 வினாக்களும், சிம்பிள் ஹார்மானிக் மோசன் மற்றும் வேவ்ஸில் (ஒத்திசைவு அலைகள்) 3 வினாக்களும், எலக்ட்ரோ டைனமிக்ஸில் (மின் இயக்கவியல்) 11 வினாக்களும், ஆப்டிக்கிஸில் (ஒளியியல்) 5 வினாக்களும், மாடர்ன் எலக்ட்ரானிக்ஸில் 7 வினாக்களும் என மொத்தம் 45 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இவற்றில் கடினமாக 6 வினாக்களும், நடுநிலையாக 22 வினாக்களும், எளிமையாக 17 வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன.

வேதியியலில் கரிம வேதியியலில் (Organic Chemistry) 15 வினாக்களும், கனிம வேதியியலில் (Inorganic Chemistry) 15 வினாக்களும், (Organic Chemistry) இயற்பியல் வேதியியலில் (Physical Chemistry) 15 வினாக்களும் மொத்தம் 45 வினாக்கள் இருந்தன. இவற்றில் 9 வினாக்கள் கடினமாகவும், 12 வினாக்கள் நடுநிலையாகவும், 24 வினாக்கள் எளிமையாகவும் இருந்தன.

உயிரியல் தாவரவியலில் (Botony) Plant Diversity-ல் 7 வினாக்களும், Plant Morphology -ல் 7 வினாக்களும், Cell Biology-ல் 3 வினாக்களும், Plant Physiology-ல் 6 வினாக்களும், Plant Reproduction-ல் 4 வினாக்களும், Genetics & Bio Technology 12 வினாக்களும், Biology of Human Welfare 2 வினாக்களும், Ecology  12 வினாக்களும் என மொத்தம் 62 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இவற்றில் கடினமாக 3 வினாக்களும், நடுநிலையாக 29 வினாக்களும், எளிமையாக 30 வினாக்களும் இருந்தன.

உயிரியல் விலங்கியலில் (Zoology) Animal Diversity-ல் 3 வினாக்களும், Animal Tissue-ல் 1 வினாவும், Cockroch-ல் 1 வினாவும், Human Physiology-ல் 11 வினாக்களும், Human Reproduction & Reproductive Health -ல் 6 வினாக்களும், Evolution-ல் 3 வினாக்களும், Human Health & Disease-ல் 3 வினாக்களும் என்று 28 வினாக்களும் இருந்தன. இவற்றில் கடினமாக 10 வினாக்களும், நடுநிலையாக 7 வினாக்களும், எளிமையாக 11 வினாக்களும் இருந்தன.

எப்படிப் படிக்க வேண்டும் NEET தேர்விற்கு?

NEET தேர்வு என்பது மிகக் கடினமானது என்று சொல்ல முடியாது. முறையான பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு இத்தேர்வை எதிர்கொள்வது மிகவும் சுலபம்தான். திட்டமிட்டு முயற்சித்தால் எளிமையாகத் தேர்ச்சி பெற இயலும் தேர்வுதான்.

நடைமுறையில் உள்ள அரசு இறுதித் தேர்வுகளுக்கு வினா வங்கிகள், குறுக்கு வழிக் கையேடுகள், புளூ பிரின்ட் இவற்றைப் பயன்படுத்தி வினா - விடை அடிப்படையில் பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்குக் கடினம் போல் தெரியும். ஆனால், இத்தேர்வின் முக்கியத்துவத்தையும், தேர்வுக்குத் தயாராவதால் உண்டாகும் பலன்களையும் முறையாகப் புரிந்துகொண்டு படிக்கும்போது இத்தேர்வில் நம் மாணவர்கள் வெற்றி பெறுவது சாத்தியமே!

வெறும் வகுப்புகளுக்குச் சென்று வருவது, பழைய வினாத்தாள்களைப் புரட்டுவது மட்டும் இத்தேர்விற்கு போதாது. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்?பாடத்திட்டத்தில் உள் தலைப்புகள் அனைத்தையும் (State, CBSE) முதலில் முழுமையாகப் பாட நூல்கள் உதவி கொண்டு தெள்ளத் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோட்பாடுகள் வரையறைகள் இவற்றைப் புரிந்து கற்க வேண்டும்.

இவை புரியாவிடில் தக்க வல்லுநர்கள் உதவி நாடி முறையாகக் கற்க வேண்டும். அதற்குப் பிறகு கோட்பாடுகள், ஃபார்முலா, இன்றியமையாக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதி தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இயற்பியல், வேதியியல் பாடங்களை Concepts (கோட்பாடுகள்) Definitions (வரையறைகள்), Derived Results (வருவிக்கப்பட்ட முடிவுகள்), Applications (பிரதியீடுகள்), Reasoning (காரணம் அறிதல்), Problems (கணக்குகள்) என்றளவில் பகுத்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக, இவற்றில் கணக்குகளுக்கு எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு பயிற்சி செய்ய வேண்டியது இன்றியமையாத ஒன்று. இந்தப் போட்டித் தேர்வில், பள்ளியில் பாடங்கள் உண்மையாகவே புரிந்து கற்பிக்கப்பட்டுள்ளதா, மருத்துவப் படிப்புக்கு தகுதியானவரா என்றுதான் சோதிக்கப்படுகிறது.

கடினமாக வினாக்கள் கேட்டு மாணவர்களைத் திணறடிப்பது தேர்வின் நோக்கமல்ல. தெளிவாகப் பாடங்கள் கற்கப்பட்டுள்ளதா என்பதை Problems, Reasoning, Analysis என்ற வகையில் சோதிப்பதே முக்கிய நோக்கம்.

இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே பாடங்களை ஆழமாகக் கற்க வேண்டும். உயிரியலைப் பொறுத்தவரையில் அது ஒரு Informative பாடம். ஆகவே அந்த அளவுக்கு அதிகமாகச் செய்திகளை நுணுக்கமாகப் படிக்க வேண்டும்.ஆகவே, நாம் NEET தேர்வுக்குத் தயாராவது ஒரு பக்கம் இருக்க எப்படிப் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து படித்தால் வெற்றி உறுதி!  
                  
ஆர்.ராஜராஜன்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.